சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளின்படி நகர் பகுதிகளில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது.
கிராமப்புற பகுதிகளிலும் தனியார் கட்டிட சுவர்களில் கட்டிட உரிமையாளர்களின் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்ய வேண்டும்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சிகளின் மாநாடு, தலைவர்களின் பிறந்தநாள், கட்சி விழாக்கள் தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
பாலங்களின் தடுப்புச் சுவர்கள், சாலையின் மையத் தடுப்புச்சுவர்கள், அரசு கட்டிடங்கள் என பல இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு இருந்தன.
சுவர் விளம்பரங்கள் அழிப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.
தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பகுதிகளில் அரசு சுவர்களில் வரையப்பட்ட சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன்படி, தேனி கொட்டக்குடி ஆற்றுப்பாலம் தடுப்புச்சுவர், சாலைகளின் மையத் தடுப்புச்சுவர் உள்ளிட்ட இடங்களில் வரையப்பட்ட விளம்பரங்களை அழித்தனர். நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளையும் கிழித்து அகற்றினர்.
ஆண்டிப்பட்டி
இதுபோல ஆண்டிப்பட்டி நகரில் பொது சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
மேலும்ஆண்டிப்பட்டி பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், கடைவீதி, வைகை அணை சாலைப்பிரிவு, அரசு மருத்துவமனை சுற்றுசுவர், ெரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் வரையப்பட்டு இருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story