கடலூரில் சாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி கோலாகலம்- கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்


கடலூரில் சாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி கோலாகலம்- கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
x

மாசி மகத்தையொட்டி கடலூர் கடலில் நேற்று சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

கடலூர்


மாசி மாதம் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது சாமிகளுடன் சேர்ந்து புனித நீராடினால், சகல நன்மைகளும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஊர்வலம்

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி  இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கடலூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாதசுவாமி உள்ளிட்ட சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்களும் கடலில் இறங்கி குளித்து புனித நீராடினர்.

தர்ப்பணம்

பின்னர் மாலையில் உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக மீண்டும் கோவிலுக்கு கொண்டு சென்றனர். தீர்த்தவாரியில் கடலூர் வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில், தேவனாம்பட்டினம் முனீஸ்வரர் கோவில், கோண்டூர் முத்துமாரியம்மன் மற்றும் திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்துகொண்டனர்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்கள் கடலில் இறங்கி குளித்து சாமி தரிசனம் செய்து, மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மாசி மகத்தையொட்டி கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டு வந்ததால், கடலூர் பீச்ரோடு, புதுப்பாளையம் மெயின்ரோடு போன்ற இடங்களில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் மாசிமகத்தின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கடற்கரையில் 2 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து பக்தர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தனர். சில்வர் பீச் கடற்கரையில் இருந்து தேவனாம்பட்டினம் வரையிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

கடலில் இறங்கி குளிக்கும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க, கடற்கரையோரம் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்களும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.


Next Story