நெருப்பெரிச்சல் அருகே மேற்கூரைகளை பிரித்து 5 கடைகளில் தொடர் திருட்டு மர்ம ஆசாமி கைவரிசை


நெருப்பெரிச்சல் அருகே மேற்கூரைகளை பிரித்து 5 கடைகளில் தொடர் திருட்டு மர்ம ஆசாமி கைவரிசை
x
தினத்தந்தி 27 Feb 2021 10:07 PM IST (Updated: 27 Feb 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

நெருப்பெரிச்சல் அருகே அடுத்தடுத்த 5 கடைகளில் தொடர் திருட்டு நடைபெற்றுள்ளது. மேற்கூரையை பிரித்து மர்ம ஆசாமி துணிகரமாக கைவரிசையை காட்டி உள்ளார்.

அனுப்பர்பாளையம்
நெருப்பெரிச்சல் அருகே அடுத்தடுத்த 5 கடைகளில் தொடர் திருட்டு நடைபெற்றுள்ளது. மேற்கூரையை பிரித்து மர்ம ஆசாமி துணிகரமாக கைவரிசையை காட்டி உள்ளார்.

மேற்கூரையை பிரித்து...

திருப்பூர் நெருப்பெரிச்சல் சந்திப்பில் ஸ்ரீபொன்னி சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் பல்பொருள் அங்காடியை (டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்)சிவகுமார், தாமோதரன், இளங்கோ, துரைசாமி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்றுகாலை கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்த ரூ.6 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. 
இதேபோல் இந்த கடையின் அருகே ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான அரிசி மண்டியை நேற்றுகாலை திறந்து பார்த்தபோது அங்கேயும் அதிர்ச்சி காத்திருந்தது. அரிசி மண்டியின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம ஆசாமி அங்கிருந்து ரூ.8 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார். இந்த 2 திருட்டு சம்பவங்களும் அந்த பகுதி மக்களிடையே காட்டுத்தீயாக பரவியது. 

கடைகளில் பணம் திருட்டு

ஆனால் இந்த பரபரப்பு அடங்கும் முன்பு ஜி.என்.கார்டன். பகுதியிலும், வாவிபாளையம் அருகிலும் 3 கடைகளில் தொடர் திருட்டு நடைபெற்ற தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜி.என்.கார்டன் பகுதியில் தமிழ்வாணன் என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் ரூ.1000-மும் பிரபாவதி என்பவருக்கு சொந்தமான மருந்துக்கடையில்(மெடிக்கல்) ரூ.92 ஆயிரமும், வாவிபாளையம் சந்திப்பு அருகே வில்சன் என்பவருக்கு சொந்தமான பி.வி.சி. கதவு, ஜன்னல் கடையில் ரூ.30 ஆயிரம்  மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள எந்திரங்களும் திருட்டு போனது தெரிய வந்தது. 
இந்த கடைகளில் மேற்கூரை மற்றும் சிமெண்டு சீட்டை பிரித்து உள்ளே நுழைந்த  மர்ம ஆசாமி பணத்தை திருடி சென்றுள்ளார். இதேபோல் ஜி.என்.கார்டன் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் தங்கி இருந்த கட்டுமான தொழிலாளர்களின் செல்போன்களையும் மர்ம ஆசாமி திருடி சென்றுள்ளார். 
மர்ம ஆசாமி
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் திருட்டு போன கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். 
அதில் ஒரு கடையில் நள்ளிரவு 12.24 மணிக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி முக கவசம் அணிந்தபடி மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று பணத்தை திருடி செல்வதும், மற்றொரு கடையில் 3.05 மணிக்கு திருடுவதும் பதிவாகி உள்ளது. 

போலீஸ் விசாரணை

ஒரே பகுதியில் அடுத்தடுத்த கடையில் தொடர் திருட்டு நடைபெற்றிருப்பதால் அனைத்து சம்பவத்திலும் ஒரே ஆசாமி ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story