எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறப்பு: மதுபாட்டில்களை சாலையில் உடைத்து கிராம மக்கள் போராட்டம் நெய்வேலி அருகே பரபரப்பு
நெய்வேலி அருகே எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் இருந்த மதுபாட்டில்களை சாலையில் உடைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வடக்குத்தில் இருந்து கீழூர் செல்லும் சாலையில் இன்று ழ(சனிக்கிழமை ) புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை திறக்க அதிகாரிகள் வந்திருந்தனர்.
இதுபற்றி அறிந்த கிராம மக்கள், இந்த பகுதியில் கடையை திறக்க கூடாது என்று தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் தரப்பில் கடை திறக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மக்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மதுபாட்டில்களை உடைத்தனர்
ஆனால் மதியம் அந்த கடையை திறந்து விற்பனையை தொடங்கி உள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கடைக்கு வந்து, கடையை உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த விற்பனையாளர்கள் மூட முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அதிரடியாக கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில் பெட்டிகளை தூக்கி வந்து சாலையில் போட்டனர். தொடர்ந்து பாட்டில்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை சற்றும் எதிர்பாராத டாஸ்மாக் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நின்றனர்.
ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து கிராம மக்கள் கடைக்கு எதிரே நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த நெய்வேலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது.
இதனால் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். . இதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பொதுமக்களால் உடைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story