ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு


ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2021 10:14 PM IST (Updated: 27 Feb 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

மக்களின் மனசு மாசு பட்டு விட்டது என்றும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்க மறுத்துவிடுங்கள் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கூறினார்.

திருப்பூர்:
மக்களின் மனசு மாசு பட்டு விட்டது என்றும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்க மறுத்துவிடுங்கள் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கூறினார்.
கொடுமணல்
திருப்பூர் வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் 6-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 7-ம் ஆண்டு நர்சரி தொடக்க விழா நேற்று காலை திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் திட்ட இயக்குனர் சிவராம் வரவேற்று பேசினார்.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பங்கேற்று பேசியதாவது:
ஈரோடு மாவட்டம் கொடுமணலில் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தினர் தோண்டியபோது பழைய காலத்து தொன்மங்கள் கிடைத்தன. அதில் மண்பாண்டங்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. கி.மு.409 ஆண்டு அதாவது 2,431 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்துக்கள் உள்ளன. அ, ஆ, இ, ஈ என்ற எழுத்துக்கள் மண்பாண்டத்தில் ஒருசேர எழுதப்பட்டுள்ளது உலகத்திலேயே கொடுமணலில் தான் கிடைக்கப்பெற்றுள்ளது. 
இந்தியாவில் அசோகர் காலத்தில் பிரமி எழுத்து தொன்மை என்று சொல்லப்படுகிறது. அதைவிட தொன்மையான மொழி தமிழ் என்பதை நிரூபிக்கும் வகையில் கொடுமணல் உள்ளது. இங்கு வியாபாரம் செய்துள்ளனர். இதனால் இந்த மண்ணோடு வியாபாரமும், தமிழ்மொழியும் சேர்ந்துள்ளது. ஆராய்ச்சி செய்தால் இன்னும் பழமையான தொன்மங்கள் கிடைக்கும். அசோகர் காலத்து பிரமி எழுத்துக்களை அரசர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இங்கு குடிமக்கள் தமிழ் மொழியை பயன்படுத்தியுள்ளனர்.
மரக்கன்று வளர்ப்பு
ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை வழங்கும் நகரம் திருப்பூர். இந்தியாவின் பல பகுதியை சேர்ந்தவர்கள் பிழைப்பு தேடி இங்கு வந்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் 5 வகை நிலங்களாக பிரித்து இயற்கையை பாதிப்படையாமல் வாழ்ந்து வந்தார்கள். இயற்கையை தமிழர்கள் வணங்கினார்கள். ஆனால் அந்த இயற்கையை மறந்ததால் தான் பல இன்னல்களை சந்திக்கிறோம். நாம் மண், காற்று, தண்ணீரை மாசுபடுத்தி விட்டோம். இதை மாற்றுவதற்கு ஒரு வழி மரக்கன்று வளர்ப்பு மட்டும் தான்.
மரங்கள் வளர்த்தால் மண் நன்றாக இருக்கும். நீர் பெறவும் மரங்களை வளர்க்க வேண்டும். திருப்பூரில் வனத்துக்குள்   திட்டத்தில் 10 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார்கள். 6 வருடத்தில் இந்த பணிகளை செய்துள்ளனர். மரக்கன்றுகளை எளிதில் நடலாம். ஆனால் அதை பாதுகாத்து வளர்ப்பது முக்கியம். அந்த பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். இந்த இயக்கம் திருப்பூர் மட்டுமின்றி இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் பணிகளை செய்ய வேண்டும்.
சினிமா நடிகர்கள்
தமிழக அளவில் இந்த இயக்கத்தை எடுத்துச்செல்ல வேண்டும். தமிழக மக்களுக்கு சினிமா உலகம் மீது எப்போதும் ஈர்ப்பு உண்டு. சினிமா நடிகர்களை பயன்படுத்தி மரக்கன்று வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். நீதிபதிகள் வந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நடிகர், நடிகைகள் வந்தால் தான் கூட்டம் கூடுகிறது. இதுபோன்ற நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நடிகர் பின்னால் செல்ல வேண்டும் என்று நான் கூறவில்லை. அவர்கள் மூலமாக நல்லதை மக்களிடம் சென்றடைய செய்யுங்கள்.
ஓட்டுக்கு பணம் 
நீர் மாசு, காற்று மாசு, மணல் மாசு ஏற்படுவதற்கு மக்கள் மனசு மாசுபட்டதுதான் காரணம். அரசியல்வாதிகளை, அதிகாரிகளை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறோம். தேர்தல் வந்து விட்டால் ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போடுகிறார்களா?. 
ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை அவர்கள் எங்கிருந்து எடுப்பார்கள். அதற்கு அடிப்படை காரணம் மக்களின் மனசு மாசுபட்டுவிட்டது. யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்காமல் மறுத்துவிடுங்கள். அது இந்த சமுதாயத்தின் பிணியை, மாசை நீக்கிவிடும். இந்த மாசுதான் பெரிய மாசு. இந்த அடிப்படை மாசு மாறிவிட்டால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட ஊழல் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது. மக்களாகிய நாம் திருந்த வேண்டும்.
மருத்துவக்கழிவுகள்
இயற்கை வளங்களை பாதுகாப்பதை கேரள மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அங்கு ஆற்று மணலை எடுக்காமல் தமிழகத்தில் இருந்து வாங்குகிறார்கள். அதிகாரிகள் துணையுடன் திருட்டுத்தனமாக விற்கிறார்கள். ஆனால் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் தமிழகம் வருகிறது. சுங்கச்சாவடியில் இருக்கும் அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு அனுமதிக்கிறார்கள். மருத்துவக்கழிவால் மண் மாசுபடுகிறது. நாம் திருந்தினால் தான் சமுதாயத்தை திருத்த முடியும். இயற்கையை போற்றுவோம். இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம். மரங்களை வளர்ப்போம். மனித உயிர்களை காப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.


Next Story