பரங்கிப்பேட்டையில் மாசி மக திருவிழாவில் பரபரப்பு: முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் உள்பட 3 பேருக்கு கத்திவெட்டு- போலீஸ் விசாரணை
பரங்கிப்பேட்டையில் மாசி மக திருவிழாவில் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் உள்பட 3 பேரை கத்தியால் வெட்டினர்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சலங்கை காரை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் செழியன். தி.மு.க.வை சேர்ந்த பரங்கிப்பேட்டை முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆவார்.
இவர் ஊர் கிராம தலைவர் பதவிக்கு போட்டியிட்டதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த பரந்தாமன் மகன் கண்ணன் என்பவர் ஊர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இதில் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
கத்திவெட்டு
இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) மாசிமக திருவிழா அந்த பகுதியில் நடைபெற்றது. செழியன் மற்றும் அவர் நண்பர்களும் மற்றும் கண்ணன் மற்றும் அவரை சார்ந்தவர்களும் கடற்கரைக்கு சென்று புனித நீராடிவிட்டு பரங்கிப்பேட்டை சங்ககார தெருவுக்கு வந்தனர். அப்போது அங்குள்ள எல்லையம்மன் கோவில் முன்பு வைத்து செழியன், கண்ணன் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த கண்ணன் மற்றும் வேலு, சதீஷ், கந்தன், பா.ஜனதா கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் தாமரை முருகன் ஆகியோர் சேர்ந்து செழியனை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது ஆதரவாளர்களான சந்திரசேகரன், அரவிந்தன் ஆகியோருக்கும் கத்தி வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த செழியன், சந்திரசேகர், அரவிந்தன் ஆகியோர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
4 பேரை பிடித்து விசாரணை
இந்த நிலையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story