15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம உதவியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவி தலைமை தாங்கினார். போராட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு, மாவட்ட செயலாளர் அருள், மாவட்ட பொருளாளர் மதுரகவி, மாவட்ட தலைவர் பாபு, திருவள்ளூர் வட்ட தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட வருவாய் கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
அதில், அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கிராம உதவியாளர்கள் ஓய்வுபெறும் போது 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
இதில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட இணை செயலாளர் குணசேகரன், அன்பழகன், பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story