ஊத்தங்கரை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருப்பத்தூர் பட்டதாரி வாலிபர் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
ஊத்தங்கரை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருப்பத்தூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் என்று தெரிய வந்துள்ளது. இந்த ெகாலை குறித்து அவருடைய நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
ஊத்தங்கரை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருப்பத்தூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் என்று தெரிய வந்துள்ளது. இந்தகொலை குறித்து அவருடைய நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம்-பாவக்கல் பிரிவு சாலையில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கொலையானவரின் உடல் கிடந்த இடத்தின் அருகில் கேக் கிடந்தது. மேலும் பிறந்த நாள் கொண்டாடியதற்கான தடயங்கள் இருந்தது. மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் இருந்தன. கொலையானவரின் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
திருப்பத்தூரை சேர்ந்தவர்
கொலையானவரை அடையாளம் கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக முகம் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் கொலையானவர் திருப்பத்தூர் மாவட்டம் மேல் அச்சமங்கலத்தை சேர்ந்த திருப்பதி மகன் திலீப்குமார் (வயது 21) என தெரிய வந்தது.
திருப்பதி அந்த பகுதியில் பூக்கடை வைத்துள்ளார். அவரது மகனான திலீப்குமார் பி.காம். பட்டதாரி ஆவார். இவர் திருப்பத்தூரை அடுத்த கொராட்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
நண்பர்களுடன் தகராறா?
இந்த நிலையில் தான் அவர் ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது விசாரணையில் தெரிய வந்தது. திருமண வீட்டிற்கு சென்ற இடத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக திலீப்குமாரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஊத்தங்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story