ராயக்கோட்டை, வள்ளுவர்புரத்தில் எருது விடும் விழா; 20 பேர் காயம்
ராயக்கோட்டை, வள்ளுவர்புரத்தில் எருதுவிடும் விழா நடந்தது. இதில் மாடுகள் முட்டி 20 பேர் காயம் அடைந்தனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை, வள்ளுவர்புரத்தில் எருதுவிடும் விழா நடந்தது. இதில் மாடுகள் முட்டி 20 பேர் காயம் அடைந்தனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை ஊராட்சி மன்ற தலைவர் முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கர்நாடகா, ஆந்திரா, ஓசூர், தளி, பாகலூர், பேரிகை, சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. எருதுவிடும் பகுதியில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை அடக்கவும், அதன் கொம்புகளில் கட்டப்பட்டு இருந்த அலங்கார தட்டிகளை பறிக்கவும் இளைஞர்கள் முயன்றனர். அப்போது மாடுகள் முட்டி 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். எருது விடும் விழாவை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது.
வள்ளுவர்புரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வள்ளுவர்புரம் கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதற்காக சாலையின் இருபுறங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காளைகளை ஓட விட்டனர்.
அந்த காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்தது என்பதை கணக்கிட்டு, அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை காண கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். விழாவின் போது மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
Related Tags :
Next Story