கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் கடந்த 15-ந் தேதி ஐ.ஓ.பி. வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளை முயற்சியும், மேலும் 8 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்த சம்பவமும் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் உத்தரவின்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் போலீஸ் ஏட்டுகள் ஆறுமுகம், லட்சுமணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் வெங்கனூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவனை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் பிடிபட்டவர் என்பது உறுதியானது. மேலும் வேப்பந்தட்டை ஐ.ஓ.பி.வங்கி மற்றும் நிதி நிறுவனம், கடைகள் ஆகியவற்றில் கொள்ளையடித்தது, திருமாந்துறையில் இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில் மொபட் திருடியது மற்றும் பெரம்பலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்தான் பிடிபட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பிடிபட்ட கொள்ளையன் வேலூர் மாவட்டம் ஆற்காடு அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரவி மகன் விஜய்(வயது 22) என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கொள்ளையன் விஜயிடம் இருந்து ஒரு மொபட் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விஜயை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story