தேர்தல் பறக்கும் படைக்கு லாயக்கற்ற வாகனம் ஒதுக்கப்பட்டதால் சோதனையில் ஈடுபட முடியவில்லை


தேர்தல் பறக்கும் படைக்கு லாயக்கற்ற வாகனம் ஒதுக்கப்பட்டதால் சோதனையில் ஈடுபட முடியவில்லை
x
தினத்தந்தி 27 Feb 2021 11:51 PM IST (Updated: 27 Feb 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பறக்கும் படைக்கு லாயக்கற்ற வாகனம் ஒதுக்கப்பட்டதால் சோதனையில் ஈடுபட முடியவில்லை

பெரம்பலூர்
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), சட்டமன்ற தொகுதி, குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய வாகன சோதனையிட காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் இயங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மதியம் வரை பறக்கும் படையில் உள்ள அதிகாரிகள், போலீசாருக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனால் காலை முதல் மதியம் வரை பறக்கும் படையினரின் வாகன சோதனை நடைபெறவில்லை. மதியத்துக்கு பிறகு பறக்கும் படைக்கு வாகனங்கள் வர தாமதமானது. இதனால் குன்னம் தொகுதிக்கு பறக்கும் படை அதிகாரிகள், போலீசாருக்கு மாலையில் தான் வாகனம் கிடைத்தது. அதன்பிறகு வாகன சோதனையில் ஈடுபட புறப்பட்டு சென்றனர். ஆனால் பெரம்பலூர் தொகுதிக்கு மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை ஈடுபடுவதற்காக பறக்கும் படையில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள், போலீசார் வந்து கலெக்டர் அலுவலகத்தில் வாகனத்திற்காக காத்திருந்தனர். ஆனால் பறக்கும் படைக்கு ஒதுக்கப்பட்ட வாகனம் பயணம் செய்ய லாயக்கற்ற நிலையில் இருந்தாக கூறப்படுகிறது. மாற்று வாகனமும் ஏற்பாடு செய்யப்படும் என்று பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்படாததால், அந்த பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறியவதற்கான வாகன சோதனையில் ஈடுபடமுடியவில்லை.

Next Story