போசம்பட்டியில் வடமாடு ஜல்லிக்கட்டு


போசம்பட்டியில் வடமாடு ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 27 Feb 2021 11:51 PM IST (Updated: 27 Feb 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

போசம்பட்டியில் வடமாடு ஜல்லிக்கட்டு

அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், வாளரமாணிக்கம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட போசம்பட்டி கிராமத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 11 மாடுகள் கலந்து கொண்டன. மாடுகளை அடக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவினர் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாடுகளையும் அடக்குவதற்கு 25 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டது. காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்கள் பிடியில் சிக்காமல் சுற்றி சுற்றி வந்து களத்தில் நின்று விளையாடியது. வடமாடு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட 11 மாடுகளில் 6 மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினார்கள். வடமாடு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. போசம்பட்டி ஊரார்களால் நடத்தப்பட்ட இந்த வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை போசம்பட்டி ஊர் அம்பலம் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.

Next Story