அகரத்தில், 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது


அகரத்தில், 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 28 Feb 2021 12:19 AM IST (Updated: 28 Feb 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

அகரத்தில், 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்காக குழி தோண்டும் பணி தொடங்கியது.

திருப்புவனம்,

தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பது கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு தெரிய வந்து உள்ளது. இதுவரை அங்கு 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த 13-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கீழடியில் 9 குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டது. அங்கு ஒரு குழி மட்டும் சுமார் 4 அடி ஆழத்தில் தோண்டப்பட்டு உள்ளது. அந்த குழியில் பாசிகள், மணிகள், சில்லு வட்டுக்கள் மற்றும் மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன.
அதைத் தொடர்ந்து அகரத்தில் 10 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு ஒரு குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் கொந்தகையிலும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அகரத்தில் ஏற்கனவே தங்க நாணயம், உறைகிணறு, கரிமயமான நெல், சங்கு வளையல்கள் உள்பட பல பொருட்களும் கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு, குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு, சிறிய பானை, குவளை உள்ளிட்ட பல பொருட்கள் கடந்த அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story