தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோவில் தேரோட்டம்
மாசிமக திருவிழாவை முன்னிட்டு தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
கரூர்
கல்யாண வெங்கடரமண சாமி கோவில்
கரூர் தாந்தோன்றிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக திருத்தேர் மற்றும் தெப்பத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்தவாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்பக விமானம், குதிரை வாகனம் உள்ளிட்டவற்றில் தினமும் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 25-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.
தேரோட்டம்
தொடர்ந்து கல்யாண வெங்கடரமண சாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆலய மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க காலை 8.15 மணியளவில் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் எழுப்பினர். திருத்தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது. இதில் கரூர், திருமாநிலையூர், தாந்தோன்றிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
நாளை (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியளவில் தெப்பத்தேர் நடக்கிறது. இதில் கோவில் தெப்பக்குளத்தில் பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருகிற மார்ச் 8-ந்தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story