அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை
கரூரில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர்
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கும் வகையிலான ஆலோசனை கூட்டம் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:- கரூர் மாவட்டத்தில் அந்தந்த சட்டமன்ற தொகுதியிலேயே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 பறக்கும் படைகள் அமைப்பு
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 1,032 முதன்மை வாக்குச்சாவடி மையங்களும், 1,050 வாக்குகளுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 242 துணை வாக்குச்சாவடி மையமும், மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 18 பறக்கும் படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக்குழுக்களும், 4 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் மற்றும் 4 கணக்கீட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் 6 பறக்கும்படை குழுக்களும், 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 3 பறக்கும்படை குழுக்களும், 3 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 4 தொகுதிகளுக்கும் தலா ஒரு வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுக்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செலவினத்தொகை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பதாகைகள், சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றப்படாத பட்சத்தில் அலுவலர்கள் மூலமாக அகற்றப்பட்டு அதற்கான செலவினத்தொகை கணக்கிடப்படும்.
அரசியல் கட்சியினைச் சேர்ந்த இறந்துபோன தலைவர்களின் சிலைகளை மறைத்திடத் தேவையில்லை. ஆனால் அவர்களின் சிலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகளை கட்டாயம் மறைக்க வேண்டும்.
கட்டணமில்லா தொலைபேசி
தனியார் வாகனங்களில் வாக்காளர்களை கவரும் வகையில் கட்சிக்கொடி, தலைவர்களின் படங்கள் வைத்துக்கொள்ள அனுமதியில்லை. மாவட்ட தேர்தல் அலுவலரிடம் உரிய அனுமதி பெறாத வணிக நோக்கிலான வாகனங்களில் கொடிகள், ஸ்டிக்கர்கள் ஒட்டி விளம்பரம் செய்யக்கூடாது. தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேர தகவல் மையத்திற்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரக்மான், கலால் துறை உதவி ஆணையர் தவச்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story