திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விவரங்களை வழங்கும் சேவை மையம் தகவல் கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விவரங்களை வழங்கும் சேவை மையத்தில் தகவல் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விவரங்களை வழங்கும் சேவை மையத்தில் தகவல் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாக்காளர் சேவை மையம்
சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற மார்ச் மாதம் 12-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நேற்றுமுன்தினம் மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. தேர்தல் பணிகள் ஒருபுறம் நடந்தாலும் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களும் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை குறித்த விவரங்களை பெறுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.
வாக்காளர்களின் வசதிக்காக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 2 பேர் பணியாற்றி வருகிறார்கள். 1950 எண்ணிற்கு வாக்காளர்கள் தொடர்பு கொண்டு வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி விவரம், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்ற விவரம் உள்ளிட்டவை தொடர்பாக இலவசமாக விவரங்களை கேட்டறிய வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் விவரம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் வாக்காளர்களும் தங்களது விவரங்களை சரிபார்க்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வாக்காளர் சேவை மையத்தில் தொலைபேசி மூலமாக வாக்காளர்கள் அதிகம் பேர் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு வருகிறார்கள். வாக்காளர் அட்டை விவரம், தாங்கள் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடி விவரம், திருத்தப்பணிகள் குறித்த விவரங்களையும் வாக்காளர்கள் கேட்டு வருகிறார்கள். வாக்காளர் அட்டை அடையாள எண் பெற்று கணினியில் சரிபார்த்து உடனடியாக தகுந்த தகவல்களை வாக்காளர்களுக்கு அளித்து வருகிறார்கள்.
இந்த சேவையை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story