பண பட்டுவாடாைவ தடுக்க குமரியில் 18 பறக்கும் படைகள் அமைப்பு


பண பட்டுவாடாைவ தடுக்க குமரியில் 18 பறக்கும் படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 1:11 AM IST (Updated: 28 Feb 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பண பட்டுவாடாவை தடுக்க 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் பண பட்டுவாடாவை தடுக்க 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
சட்டசபை தேர்தல் 
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டசபைகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பண பட்டுவாடாவை தடுக்க வாகனங்களில் அதிகளவு பணம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் பணம் கொண்டு செல்ல வேண்டும் எனில் தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று தான் கொண்டு செல்ல வேண்டும்.
பறக்கும் படை 
எனவே வாகனங்களில் அனுமதியின்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் வீதம் 6 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு பறக்கும் படையில் வருவாய்த்துறை அலுவலர், போலீசார், வீடியோ பதிவு செய்பவர் உள்பட 4 பேர் இடம்பெற்று இருப்பார்கள். இவர்கள் ‌ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தொடங்கி உள்ளனர். அதாவது ஒரு பறக்கும் படையினர் 8 மணி நேரம் பணியாற்றுவார்கள்.
கலெக்டர் ஆலோசனை
எனவே 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படையினர் நேற்று மதியத்தில் இருந்து வாகன சோதனையை தொடங்கி உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.
இதற்கிடையே 137 மண்டல குழு அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கட்டணமில்லா தொலைபேசி
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெற்று விழாக்கள் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் எவ்வித பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது. தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் சிவிகில் செயலியை பயன்படுத்தி விதிமீறல்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடலாம். இந்த செயலி மூலம் ஒருவர் எத்தனை புகார்கள் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். புகார்கள் பதிவு செய்யும் வாக்காளர்களின் சுய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
தேர்தலில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு வீடியோ பதிவிடும் குழு என மொத்தம் 6 குழுக்களும், ஒரு அக்கவுண்டிங் குழு வீதம் 6 குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு வீதம் 6 குழுக்களும் ஈடுபடுத்தப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story