குமரியிலும் பெண்கள் தங்களது வீடுகள்முன்பு பொங்கலிட்டு வழிபாடு


குமரியிலும் பெண்கள் தங்களது வீடுகள்முன்பு பொங்கலிட்டு வழிபாடு
x

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழாவுக்கு செல்ல முடியாததால், குமரியிலும் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் தங்களது வீடுகள் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.

நாகர்கோவில், 
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழாவுக்கு செல்ல முடியாததால், குமரியிலும் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் தங்களது வீடுகள் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்
கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நேற்று நடந்தது. வழக்கமாக இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிடுவார்கள். குமரி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
ஆனால் கேரள மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவுவதால் இந்த வருடம் கோவில் பகுதியில் பொங்கலிட அனுமதி கொடுக்கப்படவில்லை. அதன்படி நேற்று அவரவர் வீடுகளின் முற்றத்தில் பொங்கலிட உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அங்கு செல்ல முடியவில்லை. 
பொங்கலிட்டு வழிபாடு
எனினும் பத்மநாபபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பாரம்பரிய முறைப்படி காலை 10.50 மணிக்கு பண்டார அடுப்பு பற்றவைக்கப்பட்டு பொங்கலிடப்பட்டது. மதியம் 3.40 மணிக்கு ஆற்றுக்கால் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கொண்டு பொங்கல் நைவேத்யம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் சுசீந்திரம் மேலத்தெரு இளைஞர்கள் சார்பில் 108 பொங்கல் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து பொங்கல் வழிபாட்டை தங்கள் வீடுகளின் முன்பு படைத்து வழிபாடு நடத்தினர்.
நாகர்கோவில் வடசேரி இரவிவர்மன் புதுத்தெருவில் உள்ள வண்டிமலைச்சியம்மன் கோவிலில் நேற்று சுமார் 100 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சாலையில் இருபுறமும் பெண்கள் அடுப்பு வைத்து அதில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர்.
இதுபோல் வன்னியூரை அடுத்த மலையடி மகாதேவர் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

Next Story