மாவட்ட செய்திகள்

அரசு பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது + "||" + The number of passengers on government buses is low

அரசு பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது

அரசு பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது
நீலகிரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால், அரசு பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து இருந்தது.
ஊட்டி,

போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்-2 ஆகிய 6 பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 310 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும், மலைவாழ் படியை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான பஸ்கள் ஓடாமல் இருந்தது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர்.

இதையடுத்து தனியார் டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்க வழிவகை செய்யப்பட்டது. நேற்றும் தனியார் டிரைவர்கள் மூலம் நீலகிரியில் உள்ள கிராமப்புறங்கள், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் போன்ற வெளியிடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. ஊட்டியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் பயணம் செய்தனர்.  இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. சில அரசு பஸ்கள் எளிதில் ஸ்டார்ட் ஆகாததால் இயக்க முடியாமல் தனியார் டிரைவர்கள் திணறினர். 

மலைப்பாதை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்கள் மட்டும் தனியார் டிரைவர்களுக்கு ஓட்ட கொடுக்கப்பட்டது.  ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. நீலகிரியில் நேற்று 6 பணிமனைகளில் இருந்து 60 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதிக பயணிகள் வராததால் டிக்கெட் கட்டணம் குறைவாக வசூலானது.