காட்டுக்கோட்டையில் தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து அரசு பள்ளி மாணவிகள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
காட்டுக்கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தலைவாசல்:
காட்டுக்கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளி தலைமை ஆசிரியர்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 600 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ராஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் ஆறகளூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது இடமாற்றம் பள்ளி மாணவிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று காலை 9 மணிக்கு பள்ளியின் எதிரே சாலையில் அமர்ந்து அந்த பள்ளி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவாா்த்தை
தகவல் அறிந்ததும் ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் கணேசன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், காட்டுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஆகியோர் நேரில் வந்து பள்ளி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் சிறப்பாக பணிபுரிந்து வந்ததாகவும், அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
அப்போது மாவட்ட கல்வி அலுவலர் மாணவிகளிடம், தற்போது இடமாற்றம் செய்து உள்ள தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் கூடுதலாக இந்த பள்ளிக்கும் தலைமை ஆசிரியராக பணிபுரிவார், சட்டசபை தேர்தலுக்கு பிறகு மீண்டும் இதே பள்ளிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து மாணவிகள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம் நண்பகல் 12 மணி வரை நீடித்தது. இதனால் காட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story