சேலம் மாவட்டம் முழுவதும் 11 தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு கலெக்டர் ராமன் தகவல்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், 11 சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர்கள் மற்றும் அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் பாலு, யாதவமூர்த்தி, தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் பேசியதாவது:-
ஒத்துழைப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. அரசியல் கட்சியினர் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். தேர்தலை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு 24 மணி நேரமும் செயல்படும். தேர்தல் தொடர்பான புகார்களை 18004257020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
தேர்தல் பிரசாரம்
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் மற்றும் தனியார் இடங்களில் தேர்தல் விளம்பரம் செய்தல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்ய சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும்பட்சத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விளம்பரம் செய்யலாம்.
தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை போலீசார் அனுமதித்த இடங்களில் மட்டும் நடத்தலாம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வேட்பாளர் பிரசாரம் செய்யலாம். கூட்டமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தேர்தல் அன்று 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறக்கூடாது. அவ்வாறு மீறினால் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர் பட்டியல்
எனவே, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தாசில்தார் அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களை அணுகி படிவம் 6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8, 8-ஏ மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் ராமன் பேசினார்.
Related Tags :
Next Story