ஈரோடு மாவட்டத்தில் கட்சி கொடி கம்பங்கள்-விளம்பர பலகைகள் அகற்றும் பணி தீவிரம்


ஈரோடு மாவட்டத்தில் கட்சி கொடி கம்பங்கள்-விளம்பர பலகைகள் அகற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 Feb 2021 2:59 AM IST (Updated: 28 Feb 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள், விளம்பர பலகைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள், விளம்பர பலகைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்தியூர்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று முன்தினம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசியல் கட்சிகள் சார்பில் பொது இடங்களில் நடப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டன. மேலும் கல்வெட்டில் வரையப்பட்டிருந்த கட்சிகளின் சின்னங்கள் பேப்பர் மூலம் மறைக்கப்பட்டன. இந்த பணியில் அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம், அந்தியூர் பேரூராட்சி அதிகாரிகள் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொடுமுடி
இதேபோல் கோபி நகராட்சி பகுதியில் உள்ள சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சின்னங்கள், எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் சுண்ணாம்பால் அழிக்கப்பட்டன. மேலும் கோபி நகரில் அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
கொடுமுடி, சென்னசமுத்திரம் மற்றும் வெங்கம்பூர் பேரூராட்சி பகுதியில் நடப்பட்டிருந்த கட்சி கொடி கம்பங்கள், விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் அனைத்தையும் பணியாளர்கள் அகற்றினார்கள். மேலும் சுவரில் எழுதிய கட்சி‌ விளம்பரங்களும் அழிக்கப்பட்டன.
அம்மாபேட்டை
 அம்மாபேட்டை பேரூராட்சி பகுதியில் உமாரெட்டியூர், அம்மாபேட்டை, மூனாஞ்சாவடி ஆகிய பகுதிகளில் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்களை வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதேபோல் நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம் ஆகிய பேரூராட்சிகளிலும் மற்றும் உள்ள சிற்றூராட்சிகளிலும் கொடிக்கம்பங்கள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

Next Story