ஈரோடு மாவட்டத்தில் 2,741 வாக்குச்சாவடி மையங்கள்
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
புதிய வாக்குச்சாவடி மையங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 767 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 3 ஆயிரத்து 332 பெண் வாக்காளர்களும், 104 இதர வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 57 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 58 ஆயிரத்து 620 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 17 ஆயிரத்து 948 வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
1050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக 526 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தபால் ஓட்டு
ஈரோடு மாவட்டத்தில் 926 இடங்களில் ஏற்கனவே உள்ள 2 ஆயிரத்து 215 வாக்குச்சாவடி மையங்கள், 526 கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக 13 ஆயிரத்து 157 வாக்குச்சாவடி அதிகாரிகளும், 192 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 50 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 380 வாக்காளர்களும், முன்னாள் ராணுவத்தினர் 278 வாக்காளர்களும் உள்ளனர். எனவே மொத்தம் 64 ஆயிரத்து 720 பேர் தபால் மூலமாக ஓட்டு போட உள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்கள்
வாக்கு எண்ணும் மையங்கள் 2 இடங்களில் அமைக்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியிலும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 3 ஆயிரத்து 454 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 4 ஆயிரத்து 757 வாக்குப்பதிவு எந்திரங்களும், 3 ஆயிரத்து 695 வாக்காளர்கள் தாங்கள் அளித்து ஓட்டுகளை சரிபார்க்கும் வி.வி.பேட் கருவியும் உள்ளன.
பறக்கும் படைகள்
கொரோனா பரவல் காரணமாக வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவர்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். மேலும், 76 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 206 டாக்டர்கள் தேர்தலின்போது பணியில் ஈடுபடுவார்கள். 37 அவரச கால வாகனங்களும், மாற்றுத்திறனாளிகளுக்காக 550 சக்கர நாற்காலிகளும் தயார் நிலையில் உள்ளன. 24 பறக்கும் படை குழுக்கள், 24 நிலை கண்காணிப்பு குழுக்கள், 16 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 24 வீடியோ பார்வை குழுக்கள் ஆகியன அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் விதிமுறை உள்ளதால், உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் அதன் உரிமையாளர்கள் தங்களது போலீஸ் எல்லைக்கு உள்பட்ட போலீஸ் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கி வைத்திருக்கவோ, எடுத்து செல்லவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
Related Tags :
Next Story