போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி


போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 28 Feb 2021 4:33 AM IST (Updated: 28 Feb 2021 4:33 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஈரோடு
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
3-வது நாள் போராட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து போராடி வருகிறார்கள். 3-வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை முதல் நாள் போராட்டத்தின் போது இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பு இல்லை. 2-வது நாளில் அதிக பஸ்கள் நிறுத்தப்பட்டு 70 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. 3-வது நாளான நேற்று ஒட்டு மொத்தமாக 50 சதவீதத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான வழித்தடங்களில் ஒன்று அல்லது 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தொலை தூர பஸ்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டன. தனியார் பஸ்கள் வழக்கம்போல இயங்கின. மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் ஓடியதால் பொதுமக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு சென்றனர். அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் குறைவாக இருந்ததால் ஈரோடு பஸ் நிலையம் வழக்கமான பரபரப்பு இன்றி காணப்பட்டது.
வாபஸ்
இதுபற்றி போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் மாற்றுப்பேருந்துகள் உள்பட 800 பஸ்கள் உள்ளன. இதில் 520 பஸ்கள் இயக்கப்பட்டன. தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக, ஒப்பந்த பணியாளர்களை கொண்டு பொதுமக்களின் சிரமத்தை குறைக்க பஸ்களை இயக்கி வருகிறோம் என்றார்.
தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ஈரோடு மண்டலத்தை பொறுத்தவரை அரசு போக்குவரத்துக்கழகத்தின் 13 கிளைகளில் இயக்கப்பட்டு வந்த 720 பஸ்களில், 252 பஸ்களே இயக்கப்பட்டு, மீதமுள்ள 468 பஸ்கள் இயக்கப்படவில்லை என்றார்கள்.
இந்தநிலையில் நேற்று மாலை போராட்டம் வாபஸ் அறிவிக்கப்பட்டது.

Next Story