வால்பாறை அருகே ரூ.1 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல்
வால்பாறை அருகே ரூ.1 கோடி பரிசு பொருட்களை தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
வால்பாறை,
வால்பாறை அருகே ரூ.1 கோடி பரிசு பொருட்களை தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
தேர்தல் விதிமுறை அமல்
தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்தது.
இதையொட்டி கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
பரிசு பொருட்கள் பதுக்கல்
இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் உள்ள ஒருவர் வீட்டிலும், தனியார் தங்கும் விடுதியிலும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே வால்பாறை தி.மு.க. பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள் பரிசு பொருட்கள் இருந்த வீட்டையும், தனியார் விடுதியையும் பூட்டு போட்டு பூட்டினர். இது குறித்து அவர்கள் வால்பாறை போலீசாருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு வால்பாறை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பரிசு பொருட்களை வைத்திருந்த அறையின் சாவியை தி.மு.க.வினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தி.மு.க.வினர் முற்றுகை
அதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் வைக்க வேண்டும் என்று கூறி பரிசு பொருட்கள் இருந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வால்பாறை தாசில்தார் (தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி) வர தாமதமானதால், தி.மு.க.வினர் திடீரென வால்பாறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.1 கோடி பொருட்கள் பறிமுதல்
இதையடுத்து அங்கு வந்த வால்பாறை தாசில்தார் ராஜா, வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வீட்டிற்கும் மற்றும் தனியார் தங்கும் விடுதிக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதன் பின்னர் தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட பரிசு பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே வால்பாறையில் ரூ.1 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story