தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை


தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Feb 2021 11:16 AM GMT (Updated: 28 Feb 2021 11:16 AM GMT)

தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி:
தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார்.
தேர்தல் பறக்கும் படையினருக்கு பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 வீதம் 18 பறக்கும் படைகளும், தலா 3 வீதம் 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும், தலா 2 வீதம் 12 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவில் உள்ள அலுவலர்கள் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். அனைத்து அலுவலர்களும் பணியின்போது அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்
கொரோனா காலமாக இருப்பதால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றும்போது கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்கிறவர்கள், உரிய ஆவணங்களுடன் செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
பரிசு பொருட்கள் பறிமுதல்
தேர்தல் பணியில் ஈடுபடுகிறவர்கள் சுழற்சி முறையில் 8 மணி நேரம் பணியாற்றிட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்கள் பெறப்படும்போது, நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, உண்மை தன்மையை ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், மது, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற புகார் பெறப்பட்டால், அது குறித்தும் அப்பகுதிக்கு சென்று உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாகன சோதனையின்போது பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து சென்றால,் அவைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் கட்சிக்கொடி, சுவரொட்டிகள், விளம்பரங்கள் ஏதும் இருப்பின் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படையினர், தங்களது தினசரி பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் சிறப்பாக நடைபெற...
நிலையான கண்காணிப்பு குழுக்கள் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோதனை சாவடிகள் மற்றும் முக்கியமான இடங்கள், சாலைகளில் வாகன சோதனைகளில் ஈடுபட வேண்டும். வாகனங்களில் உரிய ஆவணம் இன்றி தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம் மற்றும் பரிசு பொருட்களை எடுத்து சென்றால், விசாரணை செய்து கைப்பற்றி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்தும் வரப்பெறும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
வீடியோ கண்காணிப்பு குழுவினர் கட்சி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரசார பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் செலவினங்கள் குறித்த ஆதாரங்கள், கூட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் செலவினங்கள் குறித்த ஆதாரங்களையும் கண்காணித்து முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். பொதுக்கூட்டங்களில் கட்சி பிரமுகர்களின் உரைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். கட்சியினர் மேற்கொள்ளும் செலவினங்களையும் முழுமையாக கண்டறியும் வகையில் கண்காணித்து பதிவு செய்ய வேண்டும். இந்த வீடியோக்களை வீடியோ கண்காணிப்பு குழுவினரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து குழுவினர்களும், தங்களது பணிகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி கவனமாக மேற்கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். கட்டுப்பாட்டு அறை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருடன் உடனுக்குடன் தகவல்களை பரிமாறி சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற முழுமையாக கண்காணித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), தனப்பிரியா (திருச்செந்தூர்), மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story