சோதனை சாவடியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அதிரடி ஆய்வு


சோதனை சாவடியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அதிரடி ஆய்வு
x
தினத்தந்தி 28 Feb 2021 8:26 PM IST (Updated: 28 Feb 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட சோதனை சாவடிகளில் வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவதை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம், 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட சோதனை சாவடிகளில் வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவதை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
விதிமுறைகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தேர்தல் ஆணைய உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிமுறைகள் கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள சோதனைச்சாவடி பகுதியில் வாகனங்களை பறக்கும்படையினர் சோதனையிட்டு வருகின்றனர். 
இந்த பணிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மூன்று வீதம் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 நிலைத்த கண்காணிப்புக் குழுக்களும், ஒரு தொகுதிக்கு ஒரு வீடியோ கண்காணிப்புக்குழு வீதம் 3 குழுக்களும் என மொத்தம் 28 கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. 
கண்காணிப்பு பணி
ஒவ்வொரு குழுவிலும் துணை தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் ஒரு சப்-இன்ஸ் பெக்டர், 3 போலீசார், ஒரு வீடியோ பதிவாளர் என மொத்தம் 6 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கண்காணிப்பு பணியின்போது உரிய ஆவணமின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றும் போது இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையே பின்பற்ற வேண்டும் எனவும், அதே நேரத்தில் இத்தகைய கண்காணிப்பு பணிகளின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், தேர்தல் தொடர்பான விளக்கங்களை பெறவும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா சேவை எண் கொண்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
புகார்
தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் புகைப்படம், வீடியோவுடன் எளிதில் தெரிவிக்கும் வகையில் சி-விஜில் செல்பொன் செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலியினை கூகுள் ப்ளேஸ்டோர் தளத்திலும் அல்லது தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 
இந்த செயலியின் மூலம் பெறப்படும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிடும் வகையில் இந்த செயலி செயல்படுத்தப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, தேர்தல் தாசில்தார் மார்ட்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story