மாவட்ட செய்திகள்

பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள் + "||" + thirupur atm thift

பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
ிருப்பூர்:--
திருப்பூரில் அதிகாலையில் கடத்தல் காரில் வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாங்க் ஆப் பரோடா
திருப்பூரை அடுத்த கூலிபாளையம் நால்ரோடு பகுதியில்  சர்க்கார்பெரியபாளையம் கிளையாக பாங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். வங்கி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சிலர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையத்தின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதுடன் ஏ.டி.எம். எந்திரம் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். 
விசாரணையில் வங்கிக்கு வந்த கொள்ளையர்கள் வங்கி ஏ.டி.எம். மையத்தின் கதவை உடைத்து, ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய், ஏ.டி.எம். மையத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஊத்துக்குளி சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 
ஏ.டி.எம். எந்திரத்தை இ்ழுத்து சென்றனர்
இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த 3 கண்காணிப்பு கேமராவில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 கண்காணிப்பு கேமராவில் 2 கேமரா பழுதாகி இருப்பது தெரியவந்தது. இதனால் ஒரு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நேற்று அதிகாலை 4.12 மணிக்கு வங்கி ஏ.டி.எம். முன்பு கார் ஒன்று வந்து நிற்பதும், அதில் இருந்து முகமூடி அணிந்த 4 பேர் இறங்குவதும், அவர்களில் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் ஸ்பிரே அடிப்பதும் பதிவாகி உள்ளது. அதைத்தொடர்ந்து 4 பேரும் உள்ளே சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க  முயற்சிக்கிறார்கள். 
ஆனால் அவர்களால் ஏ.டிஎம். எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதையடுத்து எந்திரத்தையே அங்கிருந்து பெயர்த்து, கயிறு மூலம் ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே இழுத்து வருவதும், அதற்குமேல்  ஏ.டி.எம். எந்திரத்தை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து சாலையில் நிறுத்தி இருந்த காரை வங்கியின் சுற்றுச்சுவர் பிரதான வாசல் வரை பின்நோக்கி இயக்குவதும், பின்னர் உடைத்து எடுக்கப்பட்ட அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கயிறு ஒன்றை கட்டி, அந்த கயிற்றை காரில் இணைத்து காரை முன்னோக்கி இயக்கியதும், ஏ.டி.எம். எந்திரம் தரதரவென்று சாலைக்கு இழுத்து வரப்பட்டதும், பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை காரில் தூக்கிப்போட்டு கடத்தி செல்வதும் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 
திருடப்பட்ட கார்
மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். அந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது கொள்ளையர்கள் வந்த கார் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே அனாதையாக நிற்பதை பார்த்தனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது காரில் யாரும் இல்லை. ஏ.டி.எம். எந்திரமும் அங்கு இல்லை. போலீஸ் பிடியில் சிக்கி விடுவோம் என்று பயந்த கொள்ளையர்கள் விஜயமங்கலம் சென்றதும், காரை அங்கேயே விட்டு விட்டு காரில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை வேறு வாகனத்திற்கு மாற்றி கடத்தி சென்று உள்ளனர். அதையடுத்து அந்த காரை போலீசார் கைப்பற்றினர்.
இது குறித்து வங்கி மேலாளர் கிரிதரன் (வயது 33) ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்று ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தபோது கடந்த 19-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் வைக்கப்பட்டதாகவும், சம்பவம் நடந்தபோது ஏ.டி.எம்.ல் சில லட்சம் வரை இருந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். திருப்பூரில் பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தையே பெயர்த்து கொள்ளையர்கள் எடுத்து சென்ற சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.