கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பொங்கலூர்,
ஈக்கள் தொல்லையால் அவதிப்படுவதாக கூறி, கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோழிப்பண்ணை
பொங்கலூர் அருகே பல்லடம் -தாராபுரம் சாலையில் துத்தாரிபாளையம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணை உள்ளது. இந்தத் கோழி பண்ணையில் இருந்து அடிக்கடி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் இருந்து வருகிறது. கோழி பண்ணையில் மருந்துகள் சரிவரத் தெளிக்காததால் ஈக்கள் உற்பத்தியாகி சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளுக்கு படை எடுத்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பெரும்பாலான வீடுகளில் சாப்பிடக் கூட முடியவில்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். சாப்பிட உட்காரும் போது தட்டுகளில் ஈக்கள் வருவதால் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோழிப் பண்ணையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தினி சம்பத் ஆகியோர் கோழிப்பண்ணைக்குள் சென்று நிர்வாகிகளிடம் பேசினார்கள்.
மருந்த தெளித்தனர்
உடனடியாக மருந்து தெளிக்கவேண்டும். கோழிப்பண்ணையில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோழிப் பண்ணை நிர்வாகம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டது. இனிமேல் எக்காரணம் கொண்டும் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று நடைபெற்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக கோழிப்பண்ணை இங்கு செயல்படுவதில் பிரச்சினை ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story