துணை ராணுவத்தினர் 91 பேர் நாகை வருகை


துணை ராணுவத்தினர் 91 பேர் நாகை வருகை
x
தினத்தந்தி 28 Feb 2021 4:50 PM GMT (Updated: 28 Feb 2021 4:50 PM GMT)

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 91 பேர் நாகைக்கு வந்தனர்.

நாகப்பட்டினம்:
சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 91 பேர் நாகைக்கு வந்தனர்.
துணை ராணுவத்தினர் வருகை 
சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடக்கிறது. தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவத்தினர் 91 பேர் உதவி கமாண்டன்ட் நிர்மல்சிங் தலைமையில் நேற்று நாகைக்கு வந்தனர். இதில் இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 91 துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.
பாதுகாப்பு பணி 
இதை தொடர்ந்து துணை ராணுவத்தினர் வேளாங்கண்ணியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (திங்கட்கிழமை) மாவட்டத்தில் உள்ள 15 போலீஸ் நிலையங்கள் மற்றும் வாஞ்சூர், சே‌‌ஷமூலை, மானம்பேட்டை, வாழ்மங்கலம் உள்ளிட்ட மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளிலும், கானூர், தாணிக்கோட்டகம், அருந்தவம்புலம் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Next Story