அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றம்


அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2021 10:44 PM IST (Updated: 28 Feb 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. அதுபோல் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகளும் அழிக்கப்பட்டன.

திருக்கோவிலூர்

தேர்தல் நடத்தை விதிகள்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதியும், இதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளிட்டதில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையொட்டி அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள், கட்சி கொடிகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விளம்பர பதாகைகள் அகற்றம் 

அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல இடங்களில் ஏற்கனவே அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், கட்சி கொடிகள் ஆகியவை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் அரசியல் கட்சியினர், விளம்பர பதாகைகளை அகற்றாதபட்சத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், பூங்காக்கள், பாலங்கள் ஆகியவற்றின் சுவர்களில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டு அந்த சுவர்களில் வெள்ளையடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

சங்கராபுரம் 

சங்கராபுரம் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் சம்பத்குமார் முன்னிலையில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள், சுவரொட்டிகள் ஆகியவை அகற்றப்பட்டன. மேலும் பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டன. அப்போது இளநிலை உதவியாளர் வைத்திலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகம்பங்கள், சுவரொட்டிகளை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் தலைவர்களின் சிலைகளையும் துணியால் சுற்றி, மறைத்தனர்.

Next Story