சுவர் சின்னங்கள் அழிப்பு; கட்சி கொடிகம்பம் அகற்றம்


சுவர் சின்னங்கள் அழிப்பு; கட்சி கொடிகம்பம் அகற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2021 11:13 PM IST (Updated: 28 Feb 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையால் திருப்புவனம், சிங்கம்புணரியில் சுவர் சின்னங்கள் அழிக்கப்பட்டன. கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.

திருப்புவனம்,

தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையால் திருப்புவனம், சிங்கம்புணரியில் சுவர் சின்னங்கள் அழிக்கப்பட்டன. கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.

சுவர் சின்னங்கள் அழிப்பு

திருப்புவனம் நகர்-புறநகர் பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை வரவேற்று அரசு அலுவலகங்களின் சுவர்கள், மருத்துவமனை சுவர், சிறிய பாலம், நான்கு வழிச்சாலையில் உள்ள பெரிய பாலங்கள் உள்பட பல பகுதிகளில் தலைவர்களின் பெயர், கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டிருந்தன. அதேபோல் பல இடங்களில் தலைவர்களை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் சுவர்களில் வரையப்பட்டுள்ள தலைவர்களின் பெயர், சின்னம், படம், பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டிகளை அழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றும் பணியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் தாசில்தார் ரத்தினவேல்பாண்டியன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தர்மராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கொடி கம்பம் அகற்றம்

சிங்கம்புணரி பகுதியில் அரசு அலுவலகங்கள், கடைவீதிகள், பஸ் நிலையம், சந்தை மற்றும் திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சியினரின் பேனர்கள் அகற்றப்பட்டன. தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அது மட்டுமின்றி சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான முசுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன. மேலும் அரசு அலுவலகத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள், சிலைகள் ஆகியவை துணியால் மறைக்கப்படுகின்றன.

Next Story