பகவதியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்


பகவதியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2021 11:27 PM IST (Updated: 28 Feb 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாசி திருவிழா
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. 
இங்கு மாசிக்கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மாசிக்கொடை விழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.  திருவிழா கொடியை கோவில் தந்திரி சங்கர நாராயணன் ஏற்றினார். இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் சிவகுரு பிரபாகரன், குளச்சல் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, பிரின்ஸ் எம்.எல்.ஏ.,  கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.ஏ.அசோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
சமய மாநாடு
தொடர்ந்து மாநாடு திடலில் இந்து சேவா சங்க 84-வது சமய மாநாடு கொடியேற்றம் நடந்தது. மாநாட்டை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்து சேவா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை பூஜை நடக்கிறது. 
விழாவின் கடைசிநாளான 9-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை, தீபாராதனை, தொடர்ந்து கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது. 
திருவிழாவையொட்டி கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Next Story