ஓசூர் அருகே எருது விடும் விழா: இருதரப்பினர் மோதல்; போலீசார் தடியடி கற்கள் வீசியதில் இன்ஸ்பெக்டர் காயம்


ஓசூர் அருகே எருது விடும் விழா: இருதரப்பினர் மோதல்; போலீசார் தடியடி கற்கள் வீசியதில் இன்ஸ்பெக்டர் காயம்
x
தினத்தந்தி 28 Feb 2021 6:05 PM GMT (Updated: 28 Feb 2021 6:05 PM GMT)

ஓசூர் அருகே கக்கனூரில் நடந்த எருது விடும் விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் கற்கள் வீசியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார்.

ஓசூர்:
ஓசூர் அருகே கக்கனூரில் நடந்த எருது விடும் விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் கற்கள் வீசியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே மாநில எல்லையில் உள்ள கக்கனூர் கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இந்த விழா, அரசு அனுமதியின்றி நடத்தப்பட்டதாக தெரிகிறது. விழாவில் ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டு இருந்தன.
இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். எருது விடுவது தொடர்பாக 2 தரப்பினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இது அடிதடியாக மாறி இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாகலூர் போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்தனர். 
இன்ஸ்பெக்டர் காயம்
ஒரு கட்டத்தில் மோதலை தடுக்க கூட்டத்தில் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டதால் போலீசார் மீது விழுந்தது. இதில், பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலை மீது கல் விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் எருது விடும் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. 
தொடர்ந்து அவர் போலீஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து எருது விடும் விழா பாதியில் நிறுத்தப்பட்டது. விழாவில் இருதரப்பினர் மோதல் மற்றும் போலீசார் தடியடி நடைபெற்றதால் எருது விடும் விழாவை காண திரண்டு இருந்தவர்கள் அங்கும், இங்குமாக ஓடினர். 

Next Story