கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Feb 2021 11:39 PM IST (Updated: 28 Feb 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

புதுச்சேரி, 

தமிழகம், புதுவையில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசு பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு புதுவை பாரதிவீதி- மொந்திரேஸ் வீதி சந்திப்பு பகுதியில் திடீரென சோதனை நடத்தினர். அங்கு ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து மூட்டைகளை சிலர் இறக்கி சிறிய லாரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

இதனை பார்த்த வணிக வரித்துறை அதிகாரிகள் அந்த லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த குகன் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஒசூரில் இருந்து வீட்டு சாமான்களை ஏற்றி வந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கன்டெய்னர் லாரியில் ஏறி சோதனை செய்தனர்.

அதில் சைக்கிள், டேபிள், டி.வி., ஏணி, பெட்டிகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் இருந்தன. மேலும் சில மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரிகள், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

பின்னர் அந்த கன்டெய்னர் லாரியை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இரவு நேரம் என்பதால் சோதனை நடத்தாமல் அங்கேயே நிறுத்தி கன்டெய்னருக்கு பூட்டு போட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங், ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், வணிக வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் அந்த கன்டெய்னர் லாரியில் சோதனை நடத்தினர்.

அப்போது மூட்டை, மூட்டையாகவும், பெட்டி பெட்டியாகவும் போதை பாக்கு, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன்மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த போதைப்பொருட்களையும், லாரியையும் பறிமுதல் செய்தனர். அந்த லாரி டிரைவர் குகனை கைது செய்து, புகையிலை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்கு சொந்தமானது? எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story