தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு
விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக தாக்கி அமித்ஷா பேசினார். மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நேற்று பா.ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிந்தனை
பாரத நாட்டின் புராதன மொழி இனிமையான மொழியான தமிழ்மொழியில் பேச முடியாததற்கு முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மொழியை படிக்க ஆர்வம், திருவள்ளுவர் பற்றி படிக்க வேண்டும் என்று இன்றைய தினம் ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மகத்தான கலாசாரம் இல்லாமல், பாரத நாட்டின் கலாசாரம் இருக்க முடியாது என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மண்ணில் பிறந்த பல மகான்கள் உலகம் முழுவதும் தமிழகத்தின் வரலாற்றை எடுத்துச்சென்று இருக்கிறார்கள். நாடு முழுவதும் தமிழ் மொழியையும், தமிழக கலாசாரத்தையும் மக்கள் மதிக்கிறார்கள். நாம் அ.தி.மு.க.வுடனும், நமது கூட்டணி கட்சிகளுடனும் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளோம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சிந்தனையோடு சேர்ந்து செயல்பட்டு இருக்கிற அமைப்பு நமது அமைப்பு ஆகும். ஆனால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குடும்ப ஆட்சியை மட்டுமே நம்பி உள்ள கூட்டணியாக அமைந்துள்ளது.
சுத்தமான குடிநீர்
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் பூர்த்தி அடைந்துள்ள இந்த நேரத்தில் சுத்தமான குடிநீர் இணைப்பு தரப்பட வேண்டும் என்கிற செயலில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.
ராணுவ பாதுகாப்பாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்தில் சரியான திசையில் நாட்டை வழிநடத்த வேண்டும் என்றாலும் சரி அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தங்களது குடும்பத்தை மட்டும் நினைத்து கவலைப்படுகிறது. தமிழக மக்களை பற்றி அவர்கள் அக்கறை படுவதில்லை. சோனியாகாந்திக்கு என்ன கவலை, தனது மகன் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும், மு.க.ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பது தான் கவலை. அவர்களுக்கு மக்களை பற்றி கவலையின்றி, தங்களது குடும்பத்தை பற்றியே கவலைகொள்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த காங்கிரஸ்
தி.மு.க. ஊழல் பற்றி பேசும்போது சிரிப்பு தான் வருகிறது. 2ஜி ஊழல் செய்தது யார். உங்கள் வீட்டையும், கட்சியில் உள்ளவர்களின் வீட்டையும் திரும்பி பாருங்கள். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்த போது தி.மு.க. அந்த கூட்டணியில் இருந்தது. 2ஜி முதல் 4ஜி வரை அனைத்தும் தமிழகத்திற்குள் உள்ளது. அதாவது 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் 2 தலைமுறை, 3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் 3 தலைமுறை, 4ஜி என்பது காந்தி, நேரு குடும்பத்தின் 4 தலைமுறை ஆகும்.
தமிழ் கலாசாரம் பற்றி பேசுகிறார்கள். நாம் தேசிய கல்வி கொள்கையில் கல்வியானது உள்ளூர் மொழியான தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதை கொண்டுவந்துள்ளோம். காங்கிரஸ் இத்தாலி என்பது தமிழ் மொழியா, இந்திய மொழியா என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
ஜல்லிக்கட்டை பார்க்க ராகுல் வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்ட திருத்தத்தால் தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது மோடி அரசாங்கம் ஆகும்.
முதல்-அமைச்சருக்கு பாராட்டு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக நிர்வாகம் செய்தது தமிழகம் ஆகும்.
அதேபோல் நல்லாட்சிக்கான விருதுகள் தமிழகத்திற்கு அதிகமாக கிடைத்துள்ளது. நீர்மேலாண்மையில் அனைத்து மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டதற்கான விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.
மோடி அரசு தமிழகத்தின் மேம்பாட்டு திட்டங்களில் எப்போதும் பின்தங்கியது இல்லை. அதேபோல் இந்த நாட்டின் மிகச்சிறந்த நிதி மந்திரியாக தமிழகத்தின் மகள் நிர்மலா சீதாராமன் இருந்து வருகிறார். இந்த நாட்டின் வெளியுறவு அமைச்சரும் தமிழகத்தில் இருந்து தான் வந்துள்ளார். அப்படி என்றால் நீங்கள் பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய வேண்டுமா? இல்லையா? என்பதை உரக்க சொல்லுங்கள்.
தமிழக மீனவர்களுக்கு பலன்
இந்த மாநிலத்தின் சாலைகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாயை நிர்மலா சீதாராமன், மோடி தந்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி ரூபாயை பா.ஜனதா அரசு தந்துள்ளது. மேலும் 33 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்துக்கு தந்துள்ளது.
தமிழக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும் பணியை செய்துள்ளது. கொரோனா திட்டத்தில் நபார்டு வங்கி மூலமாக தமிழகத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி விவசாயிகளுக்காக தரப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டில் இருந்து தொடங்கி மீனவர்களின் மேம்பாட்டு திட்டத்துக்கு நீலப்புரட்சி திட்டத்துக்கான பணியை மேற்கொண்டுள்ளது மோடி அரசு. இதில் அதிக பலன் தமிழக மீனவர்களுக்கு கிடைக்க உள்ளது. இதுவரை மீனவர்களுக்கு 545 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடலில் மீன்பிடிப்பதற்காக சர்வதேச உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய்க்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலைக்காக 13,791 கோடி ரூபாயில் வேலை நடந்து இருக்கிறது. சென்னை ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியதும் மோடியின் அரசாங்கம் தான். தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் அறிவிப்புகள் ஆங்கிலத்தில் இருந்தது, ஆனால் தற்போது தமிழில் செய்யப்படுகிறது.
மோதல் போக்கு அரசு வேண்டுமா?
இதை முடிவு செய்யுங்கள், மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபடும் ஆட்சி வேண்டுமா? மத்திய அரசுடன் கைகோர்த்து ‘டபுள் என்ஜின்’ சக்தியோடு தமிழகத்தை முன்னேற்றி செல்லும் ஆட்சி வேண்டுமா? எந்த ஆட்சி வேண்டும் சொல்லுங்கள். இரட்டை என்ஜின் உள்ள வண்டி வேண்டும் தானே.
நான் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தேன். மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்தினார். இந்த நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை காப்பாற்ற போராட வேண்டுமா?. எந்த மாதிரியான ஆட்சி இங்கு இருக்க வேண்டும் என்று சொன்னால், நமது பண்பாடு, கலாசாரத்தை பேணி காக்க போராட்டம் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
தாமரை, இரட்டை இலை
வேல் யாத்திரை வெற்றி தானே. வேல் யாத்திரை எப்போது வெற்றி தெரியுமா. பா.ஜ.க.வின் ஆட்சி அமையும் போது தான் முழுமையாக வெற்றி பெற்றதாக கருத முடியும். தமிழக மக்கள் விரைவில் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. நாம் எதற்காக வாக்களிக்க வேண்டும், நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கா? அல்லது எதிர் அணியில் உள்ள குடும்பங்களின் வளர்ச்சிக்கா?. ராகுல் காந்தியை பிரதமராக்க வாக்களிக்க போகிறோமா? அல்லது மோடியின் மக்கள் நலன் திட்டங்களுக்கு துணை நிற்க வாக்களிக்க போகிறோமா என்பதை முடிவு எடுக்க வேண்டும். தாமரையிலும், இரட்டை இலையிலும் நாம் பட்டனை அழுத்தி வெற்றி பெற செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய மந்திரிகள் கிஷன் ரெட்டி, ஜெனரல் வி.கே.சிங் மற்றும் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story