வேப்பூர் அருகே ஒரே மொபட்டில் சென்ற 5 பேர் பலி


வேப்பூர் அருகே ஒரே மொபட்டில் சென்ற 5 பேர் பலி
x

வேப்பூர் அருகே ஒரே மொபட்டில் சென்ற 5 பேர் உயிரிழந்தனர். 2 வயது குழந்தை உயிர் தப்பியது.

மங்களமேடு
கர்ப்பிணி மகள் 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூர் புது காலனியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தனம்(வயது 55). இவர்களுக்கு பரமேஸ்வரி(27), பச்சையம்மாள்(25) ஆகிய 2 மகள்களும், சக்திவேல்(21) என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்தமகள் பரமேஸ்வரியை அய்யலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.  
 இவர்களுக்கு செந்நிலா(3), தமிழ்நிலவன்(2) என 2 குழந்தைகள் உள்ளனர். இளைய மகள் பச்சையம்மாளை  கொளப்பாடி கிராமத்தில் உள்ள பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு நந்திதா(2) என்ற மகள் உள்ளார்.  இந்த நிலையில் கர்ப்பிணியாக உள்ள பச்சையம்மாளை பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவதற்காக தனம், சக்திவேல், பரமேஸ்வரி, செந்நிலா, தமிழ்நிலவன் ஆகிய 5 பேரும் ஒரு மொபட்டில் வேப்பூரில் இருந்து கொளப்பாடி கிராமத்திற்கு சென்றனர்.
கார் மோதியது
கர்ப்பிணியாக உள்ள பச்சையம்மாளை பார்த்து நலம் விசாரித்து விட்டு மீண்டும் வேப்பூருக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது இவர்களுடன் பச்சையம்மாளின் மகள் நந்திதாவும் வந்துள்ளார். 
இவர்கள் 6 பேரும் வேப்பூர் நோக்கி மொபட்டில் சென்றுகொண்டு இருந்தனர். வேப்பூர் அருகே உள்ள கல்லங்காடு என்ற பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது பயங்கரமாக மோதியது. 
5  பேர் பலி
இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட பரமேஸ்வரி, செந்நிலா, நந்திதா ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தனம் உயிரிழந்தார். 
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து சக்திவேலையும், தமிழ்நிலவனையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதில் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நிலவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story