மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரிப்பு


மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 March 2021 1:13 AM IST (Updated: 1 March 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் சீசன் தொடங்கியதால் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் பகுதியில் 4-க்கும் மேற்பட்ட வெள்ளைபூண்டு கமிஷன் மண்டிகளும் அதனைச்சார்ந்து‌ வெள்ளைப்பூண்டு சில்லரை விற்பனை கடைகளும் உள்ளன. இந்த மண்டிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஏலம் நடைபெறுவது வழக்கம்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் வெள்ளைப்பூண்டு சீசன் தொடங்கியுள்ளதால் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை  மார்க்கெட்டுக்கு 40 கிலோ கொண்ட 8 ஆயிரம் மூட்டை வெள்ளைப்பூண்டு விற்பனைக்கு வந்திருந்தது. வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.250 வரை விற்பனையானது.

இந்த நிலையில் நேற்றைய மார்க்கெட்டிற்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரித்து காணப்பட்டது. கொடைக்கானல், ஊட்டி, குண்டல்பேட், உடையார்பாளையம், தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளைப்பூண்டை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

மண்டிகளில் நடந்த ஏலத்தில் 200-க்கு மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் கோரினார்கள். ஏலத்தில் பொடி வெள்ளைப் பூண்டு மற்றும் விதை வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ  ரூ.50-ல் இருந்து ரூ.240 வரை விலை போனது. 

Next Story