விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
வால்பாறை,
வால்பாறையில் நடைபெற்ற விழாவிற்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் வியாபாரிகள் தொழில் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டோம். தமிழ்நாடு அரசு எங்களது முன்னேற்றத்திற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையான விலைவாசி உயர்வால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம்.
டீசல், பெட்ரோல், சமையல் கியாஸ், மளிகை பொருட்கள் விலை உள்பட அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு தவறிவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசிடம் வணிகர் சங்கங்களின் சார்பில் வைக்கப்பட்ட எந்த கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றி தரவில்லை. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் (டோல்கேட்) சுங்க கட்டணங்களை குறைக்கவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் எங்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையை வியாபாரிகள் உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு இந்த அரசு வியாபாரிகளை கொண்டு வந்து விட்டு விட்டது. இதனால் நாங்கள் எங்களது விலைவாசி உயர்வை அப்பாவி பொதுமக்கள் மீது சுமத்தவேண்டிய நிலையில் இருந்து வருகிறோம்.
கொரோனா தொற்று காலத்தில் மூடப்பட்டிருந்த கடைகளுக்கு கூட தமிழ்நாடு அரசு வரிவசூல் செய்துவிட்டது. கொரோனா தொற்று பாதிப்பால் இறந்து போன வியாபாரியின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
வியாபாரிகளுக்கு நலவாரியம் அமைத்து தர கோரிக்கை வைத்தோம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவற்காக அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு குழு அமைத்து அதன்மூலம் தீர்வு காணலாம் என்ற கோரிக்கை வைத்தோம் ஆனால் அரசு எங்களது எந்த கோரிக்கைகைளயும் ஏற்கவில்லை.
தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்பு வரும் என்று காத்திருந்தோம் அதிலும் எங்களுக்கு ஏமாற்றம் தான். விவசாய கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என்ற அறிவிப்புகள் தான் வந்தது.
ஆனால் 1 கோடி வாக்கு வங்கியை வைத்துள்ள வணிகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எந்தவித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
எனவே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக அமையக்கூடிய அரசிடம் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை மீண்டும் முன் வைப்போம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட, மாநில வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story