அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம்


அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம்
x
தினத்தந்தி 1 March 2021 1:58 AM IST (Updated: 1 March 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

தென்தாமரைகுளம், 
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
அவதார தினவிழா
 சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் வைகுண்டசாமி அவதார தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு 189-வது அவதார தினவிழா வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
 அவதார தின விழாவை முன்னிட்டு அன்று காலை நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு நோக்கி அவதார தினவிழா ஊர்வலம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் வாகன பவனி
அவதார தினவிழாவின் முன் தினமான மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. 
இந்த பேரணி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வடக்கு நடையில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருவனந்தபுரம், பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை அடைகிறது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து ஆதலவிளைக்கு மகாதீப ஊர்வலம் நடக்கிறது.
மாசி மாநாடு
அன்று இரவு 8 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திருமண மண்டபத்தில் மாசி மாநாடு நடக்கிறது. அதில், திருஏடு வாசிப்பு, அய்யாவழி அறிஞர்களின் சமய சொற்பொழிவு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 
இதில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
 ஊர்வலம்
அய்யா வைகுண்டசாமியின் 189-வது அவதார தினவிழா ஊர்வலம் மறுநாள்(4-ந்தேதி) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது. ஊர்வலத்திற்கு ப ாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார்.  ஊர்வலமானது நாகர்கோவில், கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை சென்றடைகிறது. ஊர்வலம் வரும் வழிகளில் பல மதத்தவர்கள் மற்றும் அய்யாவழி மக்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றனர். அன்றிரவு சாமிதோப்பில் வாகன பவனி, அன்னதானம், அய்யாவழி மாநாடு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
ஊர்வலத்தில் பங்கு கொள்ளும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தொற்று காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாலபிரஜாபதி அடிகளார் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story