திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.40 லட்சம் தங்க நகைகள்
திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.40 லட்சம் தங்க நகைகளை கைப்பற்றிய சுங்கத்துறையினர், அவற்றை கடத்தி வந்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.40 லட்சம் தங்க நகைகளை கைப்பற்றிய சுங்கத்துறையினர், அவற்றை கடத்தி வந்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கம் கடத்தல் அதிகாரிப்பு
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்யும் போது, தங்கம் கடத்துபவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களிடம் இருந்து கடந்த சில மாதங்களாக கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கேட்பாரற்று கிடந்த தங்கம்
எவ்வளவு தான் அதிகாரிகள் சோதனை நடத்தினாலும், தங்கம் கடத்தி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு தொடர்ந்து தங்கத்தை கடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை விமான நிலையத்தில் குடியுரிமைப்பிரிவு அருகிலுள்ள கழிவறை வளாகத்தை சுகாதார பணியாளர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றார். அப்போது, அங்குள்ள ஒரு கழிவறையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 840 கிராம் தங்க நகைகள் ஒரு காகிதத்தில் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடந்தது.
கடத்தி வந்தது யாா்?
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், அந்த தங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், வெளிநாட்டில் இருந்து தங்க நகைகளை கடத்தி வந்த வந்த மர்ம நபர், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து அவற்றை கழிவறையில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த தங்கத்தை கடத்தி வந்த நபர்குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story