வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயம் அழிந்து விடும்- ராகுல்காந்தி பேச்சு


வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயம் அழிந்து விடும்- ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 1 March 2021 2:56 AM IST (Updated: 1 March 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயம் அழிந்து விடும் என ராகுல்காந்தி பேசினார்.

தென்காசி, மார்ச்:
வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயம் அழிந்து விடும் என்று புளியங்குடியில் சிறு, குறு தொழிலாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.

கலந்துரையாடல் கூட்டம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சிறு, குறு தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் விவசாயிகள், பீடித் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்கள் பற்றி விவசாயிகள் பலர் தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி தெரிந்தால் அவர்களின் மனது மிகவும் வேதனை அடையும்.

விவசாயம் அழிந்து விடும்

சிறு விவசாயிகளை அழித்துவிட்டு அவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் சம்பாத்தியம் பண்ண முடியும் என்பதற்காகத்தான் இந்த வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் பெரிய வியாபாரிகள் கோதுமை, அரிசி உள்ளிட்டவைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்ளலாம். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அந்த பொருட்களை பதுக்கி வைக்கலாம். 

ஆனால், விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை என்றால் அது குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் மட்டும்தான் முறையிட முடியும். மற்ற எந்த இடத்திற்கும் அவர்களால் செல்ல முடியாது. இந்த வேளாண்  சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயிகளும், விவசாயமும் அழிந்து விடும். ஆகவே தான் நாங்கள் இந்த வேளாண் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறோம். நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராடி வருகிறோம்.

நிலை மாற வேண்டும்

இந்தியாவில் உள்ள விவசாயம் முழுவதும் யாரோ 4 பேரிடம் சென்று விடக்கூடாது. மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக தான் அரசு உள்ளது. அதை விட்டுவிட்டு அவர்களுக்கு அதிகமாக வரி செலுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தக்கூடாது. வங்கியில் கூட பெரிய தொழில் அதிபர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். சிறு, குறு தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பாசத்தால் வெற்றி பெற முடியும்

தொடர்ந்து ராகுல்காந்தி கடையநல்லூர், தென்காசியில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:- 
மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டில் அன்பு, அரவணைப்பு, பண்பு, பாசம் மூலம் தான் மக்களை வெற்றி பெற முடியும்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்காக குனிந்து கொண்டு இருக்கிறார். அவர் தமிழக மக்களுக்கு தான் குனிய வேண்டுமே தவிர மத்திய அரசுக்கு அல்ல. புளியங்குடியில் இருந்து எலுமிச்சை பழம் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியால் இந்த தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. 
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதில் வரக்கூடிய வருமானம் ஒரு சில நிறுவனங்களை போய் சேருகிறது.

இதனால் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதை எல்லாம் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. மக்கள் தங்களின் நிலையை புரிந்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ராகுல்காந்தி குற்றாலம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

Next Story