தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு
தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார்.
ஓமலூர்:
தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார்.
தமிழர் வாழ்வுரிமை மாநாடு
ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழக வேலை தமிழருக்கே என்ற தலைப்பில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் யுவராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். இதற்கு கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பு வழங்க வேண்டு்ம். தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகள் மற்றும் தனியார் பெரு நிறுவனங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற வேலை உறுதிச்சட்டத்தை அரசு இயற்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
பெயர் பலகை வைக்க கூடாது
எங்கள் பிள்ளைகளின் வாழ்வுரிமை மற்றும் தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பை வட இந்தியர்கள் அபகரித்து கொள்கின்றனர். மத்திய அரசு பணிகளான வருமான வரித்துறை, துப்பாக்கி தொழிற்சாலை, விமான நிலைய பணி, கப்பல் துறை என அனைத்து நிறுவனங்களிலும் வடமாநிலத்தவர்கள் வேலைக்கு தேர்வு செய்து உள்ளனர். ஆனால் தமிழர்களுக்கு வேலை இல்லை.
தமிழக வாழ்வுரிமை கட்சி எந்த தனிப்பட்ட சாதி மதத்திற்கான கட்சி இல்லை. 7 கோடி தமிழர்களுக்கான வாழ்வுரிமை காக்க போராடும் கட்சியாகும். வீரப்பன் இருக்கும் வரை தமிழக எல்லை பக்கம் வராத கன்னட அமைப்பினர் தற்போது எல்லையில் தமிழ் பெயர் பலகை வைக்க கூடாது என போராட்டம் நடத்துகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலை, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதான் சம உரிமையாகும். இதற்காக 40 ஆண்டுகளாக போராடிய ராமதாசை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்மானங்கள்
இதில் தமிழ்நாடு வேலை தமிழர்களுக்கே என்ற அவசர சட்டத்தை இயற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்களில் தமிழில் பதாகைகள் வைக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநில துணை பொதுச்செயலாளர் தீரன், மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன், மாநில விளையாட்டு அணி துணைத்தலைவர் சரவணமூர்த்தி, ஓமலூர் ஒன்றிய செயலாளர் அன்புராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story