சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவுக்காக 214 எந்திரங்கள் அனுப்பி வைப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவுக்காக 214 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவுக்காக 214 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி முதல் ஜனவரி 25-ந் தேதி வரை சரி பார்த்து தேர்தலுக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள 4,280 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 7,460 வாக்குப்பதிவு எந்திரங்கள், 5,479 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 5,970 தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் உள்ளன. இந்த எந்திரங்களில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 சதவீதம் எண்ணிக்கையில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக வாக்கு எந்திரங்களை அனுப்பும் பணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அனுப்பி வைப்பு
இதற்காக பாதுகாப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன், அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைத்தார்.
இதில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். வாக்குப்பதிவு அலுவலர்களின் பயிற்சிக்காகவும், பொதுமக்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தவும் 11 தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட 214 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரிகள் வாகனங்களில் பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
சென்னைக்கு...
2006-ம் ஆண்டுக்கு முந்தைய எம்-1 வாக்குப்பதிவு எந்திரங்களை சென்னையில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்தில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 2,708 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,319 கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை தனித்தனி வாகனங்களில் சேலத்தில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story