ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.19¼ லட்சம் பறிமுதல்
கூடலூர்-கேரள எல்லையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.19¼ லட்சம் பறிமுதல் செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கூடலூர்,
தமிழகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்ட வயல், நம்பியார்குன்னு, கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடிகளில் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பணம் பறிமுதல்
இந்த நிலையில் கூடலூர் அருகே கேரள எல்லையான நாடுகாணி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு காய்கறி முட்டைகள் ஏற்றி வருவதற்காக சென்ற சரக்கு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததாக ரதீஷ் என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், ரம்ஷீத் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சமும், துசீன் என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சமும், சாகீப் என்பவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 46 ஆயிரமும்,
அசீஸ் என்பவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 41 ஆயிரத்து 800-ம், முகமதுவிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.19 லட்சத்து 22 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story