அனுமதி பெறாமல் விடுப்பு எடுக்கக்கூடாது


அனுமதி பெறாமல் விடுப்பு எடுக்கக்கூடாது
x
தினத்தந்தி 28 Feb 2021 11:04 PM GMT (Updated: 28 Feb 2021 11:23 PM GMT)

விடுதிகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அனுமதி பெறாமல் விடுப்பு எடுக்கக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முடிவடையும் நாள் வரை செய்யத்தக்கவை மற்றும் செய்யத்தகாதவை என்னென்னவென்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 

குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சி அந்த அதிகார அடிப்படையில் வாக்காளர்களை கவரும் விதத்தில் புதிய திட்டங்கள், சலுகைகள் அல்லது நிதி உதவிகள் மற்றும் உறுதிமொழிகள் அல்லது வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்றவற்றை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது

இந்த தடை புதிய மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கும் பொருந்தும். அரசின் திட்டங்களுக்கு புதிய நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது. தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் நலத்திட்டங்களுக்கு நிதி விடுவிப்பது, பணிகள் செய்வதற்கு நிதி விடுவிப்பது, ஒப்பந்ததாரருக்கு பணி வழங்குவது கூடாது.

பேரிடர் ஏற்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையோ அல்லது கருணை தொகையோ வழங்குவதாக இருந்தால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளித்துவிட்டு வழங்க வேண்டும். 

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையை அதிகரிக்கக்கூடாது. அதிகப்படுத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

பிரசார காலம் முடிந்த பின்னர் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியில் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. இதற்காக தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குறிப்பாக திருமண மண்டபங்கள், விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், சமுதாய கூடங்களில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு துறையின் தலைமை அதிகாரிகள் முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story