சித்தோடு அருகே வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-1 மாணவி சாவு; காப்பாற்ற முயன்ற தந்தை கதி என்ன? தேடும் பணி தீவிரம்
சித்தோடு அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவி பரிதாபமாக இறந்தார். காப்பாற்ற முயன்ற தந்தை கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பவானி
சித்தோடு அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவி பரிதாபமாக இறந்தார். காப்பாற்ற முயன்ற தந்தை கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பிளஸ்-1 மாணவி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மெயின் ரோட்டில் உள்ள கதிர் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 45). அவருடைய மனைவி செல்வி (42). இவர்களுடைய மகள்கள் காயத்ரி (21), அனுஸ்ரீ (17).
இதில் காயத்ரி திருப்பூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அனுஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
வாய்க்காலில் குளிக்க விருப்பம்
செல்வகணபதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்று காலை குடும்பத்துடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள நசியனூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த காயத்ரிக்கும், அனுஸ்ரீக்கும் வாய்க்காலில் குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதனை தனது தந்தையிடம் தெரிவித்தனர்.
தண்ணீரில் மூழ்கினர்
இதைத்தொடர்ந்து காரை வாய்க்கால் கரையில் நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கினர். பின்னர் செல்வகணபதி வாய்க்காலின் படித்துறையில் நின்று குளித்து கொண்டிருந்தார். காயத்ரியும், அனுஸ்ரீயும் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். செல்வி குளிக்காமல் கரையில் நின்றிருந்தார். இந்த நிலையில் காயத்ரியும், அனுஸ்ரீயும் தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதை பார்த்த செல்வி, “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார்.
சத்தம் கேட்டு அருகே குளித்துக்கொண்டிருந்த செல்வகணபதி மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் நீந்தி சென்று 2 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் காயத்ரியை மட்டும் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மகள் பிணம் மீட்பு
ஆனால் நீச்சல் தெரியாததால் செல்வகணபதியையும் தண்ணீர் இழுத்து சென்றது. இதைத்தொடர்ந்து பவானி தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, பொதுமக்களுடன் சேர்ந்து வாய்க்காலில் இறங்கி செல்வகணபதியையும், அனுஸ்ரீயையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சிறிது தூரத்தில் அனுஸ்ரீ பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் செல்வகணபதி கிடைக்கவில்லை. இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து செல்வகணபதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது.
சோகம்
வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட செல்வகணபதி கதி என்ன? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று (தி்ங்கட்கிழமை) 2-வது நாளாக அவரை தேடும் பணி நடக்கிறது.
அனுஸ்ரீயின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-1 மாணவி பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story