தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் வருகை


தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் வருகை
x
தினத்தந்தி 1 March 2021 5:13 AM IST (Updated: 1 March 2021 5:13 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் ஈரோடு மாவட்டத்துக்கு வந்தனர்.

ஈரோடு
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் ஈரோடு மாவட்டத்துக்கு வந்தனர்.
துணை ராணுவப்படை
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள். இதேபோல் கண்காணிப்பு குழுவினரும் அரசியல் கட்சியினரின் செயல்பாடுகள், பிரசாரங்களை கண்காணிக்க தொடங்கி விட்டனர்.
இந்தநிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க துணை ராணுவ படையினர் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலமாக 92 துணை ராணுவத்தினர் ஈரோட்டுக்கு நேற்று வந்தனர்.
பாதுகாப்பு பணி
அவர்களை ஈரோடு மாவட்ட போலீசார் வரவேற்று கோபிசெட்டிபாளையத்துக்கு அழைத்து சென்று ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர் இதேபோல் மற்றொரு ரெயிலில் 130 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் ஈரோடு வந்தனர். அவர்கள் நாமக்கல் மாவட்ட பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், டெல்லியில் இருந்து 260 பேர் கொண்ட 2 குழுவினர் திருப்பூர் மாவட்ட பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அரியலுார், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட போலீசாரும் ஈரோட்டுக்கு வந்து துணை ராணுவத்தினரை தங்களது போலீஸ் வேன்களில் அழைத்து சென்றார்கள்.

Next Story