சாதி, மதவெறியை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக்கூடாது


சாதி, மதவெறியை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக்கூடாது
x
தினத்தந்தி 1 March 2021 8:20 PM IST (Updated: 1 March 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

சாதி, மதவெறியை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக்கூடாது என்று அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேட்புமனு தாக்கலின்போது 2 பேர் மட்டுமே வர வேண்டும். கடந்த தேர்தலில் 5 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேட்பாளரை சேர்த்து 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் வேட்பு மனுதாக்கல் செய்ய வாகனங்களில் வருபவர்கள் முன்பு 3 வாகனங்களில் வரலாம் என்று இருந்த நிலையில் தற்போது 2 வாகனங்களில் மட்டுமே வரலாம். 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள பகுதியில் துணை வாக்குச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறைப்படியும், சுமூகமாகவும் தேர்தலை நடத்தி முடிக்க அனைத்து அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
ஒத்துழைப்பு
மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது சாதி, மதம், மொழி சார்ந்த வெறியை தூண்டும் வகையிலும், பகையை ஏற்படுத்தும் வகையிலும் பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது. கட்சிகளின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்தும் பிரசாரத்தின்போது பேசக்கூடாது, விமர்சனங்களும் செய்யக்கூடாது. குறிப்பாக வழிபாட்டு தலங்களில் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளையும், அதன் மைதானங்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
தேர்தல் சம்பந்தமாக பொதுக்கூட்டங்கள் நடத்தவோ அல்லது ஊர்வலங்கள் செல்லவோ காவல்துறையினரிடம் முன்அனுமதி பெற வேண்டும். ஒலிப்பெருக்கி அமைப்பதற்கும் அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்களை இரவு 10 மணிக்கு பிறகும், காலை 6 மணிக்கு முன்பும் நடத்தக்கூடாது. வேட்பாளருக்காக அனுமதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட வாகனத்தை வேறு நபர் பயன்படுத்தக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் அனைவரும் பின்பற்றி பொறுப்புள்ள ஜனநாயகம் அமைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story