தேனியில் துணை ராணுவம்-போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்
தேனியில் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
தேனி:
துணை ராணுவம் வருகை
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலை அமைதியாக நடத்த போலீஸ் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவி கமாண்டன்ட் குர்மித் சிங் தலைமையில் 90 பேர் தேனி மாவட்டத்துக்கு நேற்று வந்தனர்.
இதையடுத்து துணை ராணுவ படை வீரர்கள், தேனி மாவட்ட ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை பிரிவு போலீசார், தேனி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் ஆகியோரின் அணிவகுப்பு தேனியில் நேற்று மாலை நடந்தது.
துப்பாக்கியுடன் அணிவகுப்பு
அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் முன்பு இந்த ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்தார்.
அங்கிருந்து துப்பாக்கி ஏந்திய படி துணை ராணுவ படை வீரர்களும், தடியுடன் போலீசாரும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் அல்லிநகரம் பஸ் நிறுத்தம், நேரு சிலை சிக்னல், பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலையில் பங்களாமேடு பகுதியில் நிறைவடைந்தது.
தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தின் பிற நகர்ப்புற பகுதிகளிலும் இதுபோன்ற அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.
மேலும் கூடுதல் எண்ணிக்கையில் துணை ராணுவ படைவீரர்கள் தேனி மாவட்டத்துக்கு ஓரிரு நாட்களில் வருவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story